உலகின் மிகவும் செயலில் உள்ள எரிமலையாகக் கருதப்படும் இந்தோனேசியாவின் லெவோடோபி (Lewotobi) எரிமலை வெடித்து சாம்பல் மேகம் வானில் பத்து கிலோமீட்டர் உயரம் வரை விரிந்துள்ளது.
இரட்டை சிகரங்களை கொண்ட இந்த எரிமலையின் லக்கிலக்கி பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பின் காரணமாக சுற்றுப்புறம் புகை மற்றும் சாம்பலால் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
எரிமலையின் 6 முதல் 7 கிலோமீற்றர் பரப்பளவில் வசிக்கும் மக்களுக்கு உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியமான மண்சரிவுகளைக் கண்காணிக்க அதிகாரிகள் முழு தீவிரத்தில் பணியாற்றி வருகின்றனர்.
“வெடிப்பின்போது கனமழை பெய்தால், எரிமலைக்குழம்பு உருவாகி மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,” என இந்தோனேசிய எரிமலை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.
குறித்த எரிமலை சமீப காலமாகவே பல்வேறு வெடிப்புகளை பதிவுசெய்து வருகிறது. இதன் காரணமாக ஜூலை மாதத்தில் பாலி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதம், ரத்து ஆகிய சிக்கல்களை எதிர்கொண்டன.
இந்தோனேசியா, உலகில் அதிக எரிமலைகளை கொண்ட நாடாகும். இதனால், இந்நாட்டில் எரிமலை வெடிப்புகள் பொதுவாகவே ஏற்படுகின்றன என்றாலும், லெவோடோபி எரிமலையின் தற்போதைய செயல், பொதுமக்களுக்கு மிகுந்த பதட்டத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.