இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் இளைய தலைமுறையினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் செயலி தற்போது மற்ற அனைத்து சமூக வலைத்தளங்களையும் முந்தி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது.
இந்தியாவில் மட்டும் 43 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய பயனர் அடிப்படையைக் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், அங்கு வெறும் 17 கோடி பேர் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.
இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், காலமாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தத் தொடரில், தற்போது ஒரு முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பு, எந்தவொரு பயனரும் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, அந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல், குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்கள் (followers) உள்ளவர்களுக்கு மட்டுமே ‘லைவ்’ வீடியோ வசதி கிடைக்கும் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.