கேகாலை பேருந்து டிப்போவில் பணியாற்றிய அதிகாரியின் மிகப்பெரிய மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், கேகாலை மாவட்ட செயலகத்தில் வியாழக் கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தின் போது உரையாற்றிய அமைச்சர், “மாதம் ரூ.65,000 சம்பளம் பெறும் ஒரு டிப்போ அதிகாரி, 110 பேருந்துகளின் உரிமையாளர் என கூறப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானது,” என தெரிவித்தார்.
“அவர் உண்மையில் 110 பேருந்துகளின் உரிமையாளர் என்றால், அவருக்குக் கிடைக்க வேண்டிய மாத சம்பளம் மட்டும் ரூ.15 இலட்சமாகும். இது தெளிவாகவே ஒரு பெரும் ஊழலைக் காட்டுகிறது,” என்றும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், கேகாலை பேருந்து டிப்போ தற்சமயம் முற்றாக செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், அந்த பகுதியில் தேவையற்ற எண்ணிக்கையிலான ஊழியர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இலங்கை போக்குவரத்து சபை (SLTB) திட்டமிட்டே அழிக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் சீரமைக்க குறைந்தது ஐந்து ஆண்டுகள் தேவைப்படும். அரசாங்கம் 600 புதிய பேருந்துகளை கொள்வனவுசெய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் அவை 2026 ஜூன் மாதத்திற்கு பிறகே வரக்கூடும்,” எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, போக்குவரத்து சபையில் நிலவி வரும் ஊழலானது வேகமாக பரவும் புற்றுநோயைப் போன்று பரவி வருவதாகவும், அந்த ஊழலை வேரோடு ஒழிக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
“இந்த நிலையிலிருந்து மீள மீட்க, மிகப்பெரிய போராட்டமே நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டுக்குள் SLTBயை முற்றாக மாற்றுவது எங்களது நோக்கம்,” என்றும் அமைச்சர் கூறினார்.