(குரு சிஷ்யன்)
அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் இயற்கை சூழலில் இயங்கி வரும் கரடிக்குளம் ரஹ்மானியா வித்தியாலயம், 2024 (2025)ஆம் ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சையில் 90% தேர்ச்சி பெற்றதோடு, கல்வி வரலாற்றில் முக்கியப் பக்கத்தைத் திருப்பியிருந்தது. இம்மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா நேற்று (04.08.2025) பாடசாலை வளாகத்தில் அதிபர் கே.எல். முனாஸ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
சிறந்த பெறுபேறுகள் வழக்கமாக பெரிய பாடசாலைகளில் மட்டும் எதிர்பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில், பொருளாதார ரீதியில் பின்னடைவு கொண்ட சமூகத்திலிருந்து கல்விக்காக பாடசாலை செல்வதென்பது சவாலான விடயம். அந்நிலையில், இப்பாடசாலையின் அதிபர் கே.எல்.எம்.முனாஸ், ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், மாணவர்களின் விடாமுயற்சியும் இச்சாதனையை சாத்தியமாக்கியிருந்தது.
மாணவர்களின் கல்விச் சாதனைக்கு பாராட்டுகளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளும் வழங்கும் இவ்விழாவில் கெளரவ அதிதியாக தவிசாளர் கெளரவ ஏ.எஸ்.எம். உவைஸ், விசேட அதிதியாக அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம். ரஸ்மி, பிரதேச சபை உறுப்பினர் கெளரவ ஏ.சி. நியாஸ், பொறியியலாளர் எம்.மக்புல் ஆகியோர்களுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வு, இளைய தலைமுறையின் கல்விச் செழுமையை ஊக்குவிக்கும் முக்கியமான நினைவூட்டலாக அமைந்தது.