(குரு சிஷ்யன்)
2024ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உயரிய வெற்றிப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு விழா, “சிறகு விரித்த சிட்டுக்களுக்கு ஆரம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழா” எனும் கருப்பொருளில் 2025 ஆகஸ்ட் 3ஆம் திகதி அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலய வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், வெட்டுப் புள்ளிகளைத் தாண்டிய 8 மாணவர்களும், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 25 மாணவர்களும் பாராட்டுப் பெற்று கௌரவிக்கப்பட்டனர். மாணவர்கள் பெற்ற இந்தக் கல்வி சாதனைக்கு வழிகாட்டிய ஆசிரியர்களான சுலைமா லெவ்வை மற்றும் றுஷ்தா சிராஜுடீன் ஆகியோரும் மேடையில் அழைக்கப்பட்டு சிறப்பு கௌரவம் பெற்றனர்.
இவ்விழாவின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ்.ஏ.எம். றஹ்மதுல்லாஹ் (நளீமி) கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
விசேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பெளஸ், கௌரவ அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றஸ்மி, சிறப்பு அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எச். ஹம்மாத் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் மற்றும் அல்மினா பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்: எஸ். றகீம், பழைய மாணவர்கள் சங்க செயலாளர்: ஏ.சி. றிசாத் மேலும் பெற்றோர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழா, மாணவர்களின் கல்விச் சாதனையை மட்டும் அல்லாமல், அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது. மாணவர்கள் மீதான ஊக்கம், நம்பிக்கை மற்றும் பாராட்டுச் செயல்கள் இன்னும் பல சாதனைகளுக்குத் அடித்தளமாக அமையும்.