மருத்துவர்களின் இடமாற்றப் பட்டியல் கொண்டிருந்த சிக்கல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பல கோரிக்கைகள் தொடர்பில் உடனடி தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றால், ஓகஸ்ட் 11ஆம் திகதி காலை 8 மணிக்குப் பிறகு நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையைச் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய ஊடாக வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது,
“சுகாதார அமைச்சுடன் பலமுறை கலந்துரையாடல்களில் ஈடுபட்டும், இடமாற்றப்பட்டியலில் உள்ள முக்கியமான சிக்கல்களைத் தீர்க்க எந்தவிதமான அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது சங்கம் எழுப்பிய பிரச்சினைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.”
இந்நிலையில், சங்கத்தின் மத்தியக்குழு, இது தொடர்பான பணிப்புறக்கணிப்பை கடைசி முயற்சியாக ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது என்றும், இந்த பணிப்புறக்கணிப்பு நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளின் செயற்பாடுகளைப் பெரிதும் பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
சுகாதார அமைச்சினால் கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில்கள் வழங்கப்படாவிட்டால், மருத்துவ சேவையில் தடை ஏற்படும் அபாயம் இருப்பதைக் கருத்தில் கொண்டு உடனடியாக தீர்வுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது