(குரு சிஷ்யன்)
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களமும், அட்டாளைச்சேனை கால்நடை வைத்திய காரியாலயமும் இணைந்து நடாத்தும் இவ்வாண்டுக்கான PSDG செயற்றிட்டத்தின் கீழ், திரவப்பால் நுகர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (2025.08.05) அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலயத்தில் அதிபர் ஓ.எல்.எம். ரிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட கால்நடை வைத்தியர் ஏ.தையுபா(BVSc, MBA, MVSc) அவர்கள், திரவப்பாலின் மகத்துவம் மற்றும் அதன் உடல்நலனுக்கான பயன்கள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் உரையை நிகழ்த்தினார். அவரது உரை அனைவரிடையும் சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இவ் விழிப்புணர்வு நடவடிக்கைக்காக அட்டாளைச்சேனை கோட்டத்தில் பல பாடசாலைகள் இருந்தும் எமது பாடசாலை தெரிவுசெய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியது என அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், திரவப்பால் வழங்கியதற்கும், அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கும் நன்றியைத் தெரிவித்தார்.
கால்நடை வைத்திய காரியாலயத்தின் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு அறிவாற்றலோடு, ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.