Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

கல்விச் சபை தெரிவு குழுவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை! தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக உதுமாலெப்பை எம்பி கடும் விமர்சனம்

Posted on August 6, 2025 by Admin | 145 Views

(அபூ உமர்)

நாட்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் இந்த முக்கிய கட்டத்தில், கல்விச் சபையை அமைப்பதற்காக கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 8 பேரும், தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் , அக்குழுவில் முஸ்லிம்கள் யாரும் நியமிக்கப்படாமல் இருப்பது சமூக சமத்துவத்துக்கு முரணாக உள்ளதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கவலை தெரிவித்தார்.

இக் குழுவில் முஸ்லிம் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையாவது நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நேற்று (2025.08.05) பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உரையாற்றிய அவர், முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை சுட்டிக்காட்டினார்.

“கல்விச் சபை அமைப்பதற்கான குழுவில் முஸ்லிம் ஒருவர் கூட ஏன் இடம்பெறவில்லை என மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். இது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ள செயற்பாடாகத் தெரிகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், கல்வி அமைச்சிலும் பல்கலைக்கழகங்களிலும் ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், கல்வியியலாளர்கள் பணியாற்றி வருவதையும் அவர் நினைவுபடுத்தினார். எனவே, சமத்துவம் பேணும் நோக்கில் குறைந்தபட்சமாக ஒருவராவது முஸ்லிம் சமூகத்திலிருந்து இக்குழுவில் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

இக் கோரிக்கைக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி, கல்விச் சபை அமைப்பதற்கான குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குழுவில் சேர்ப்பது தொடர்பான பரிந்துரையை கல்வி அமைச்சின் செயலாளர் அவதானித்து நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் உறுதியளித்தார்.