(ஊடகப் பிரிவு)
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) மாலை நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையின்போது மட்டக்களப்பு கோறளைப்பற்று நிருவாக சிக்கல் தொடர்பில் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், 1999ஆம் ஆண்டு இலங்கையில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்காக பொதுநிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட ‘பாணம்பரன’ ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், இந்த நாட்டில் 8 புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டது.
2000.07.13ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானத்துக்கமைய அந்த 8 பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகாலமாக இயங்கி வருகின்றன. அவற்றில் 6 பிரதேச செயலகங்கள் ஏற்கெனவே வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டு இயங்குகின்ற நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கென்று சிபாரிசு செய்யப்பட்ட கோறளைப்பற்று மத்தி, தெற்கு என்ற இவ்விரு பிரதேச செயலகங்களும் இன்றும் வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்படவில்லை.
இந்த 25 ஆண்டுகாலமாக இப்பிரதேச செயலாளர்கள் தமது எல்லைகளின் பிரதேச எல்லைகள் தெரியாமல், அடிப்படை பிரச்சினைகளுக்கு வாகரை, கிரான் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அலைக்கழிக்கப்படுகிறார்கள். பாணம்பரண ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் இந்த பிரதேச செயலகங்களுக்குரிய வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிக்க வேண்டும்.
2012-2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்ய அறிக்கை சமர்ப்பிக்க எல்லை நிர்ணய குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பாராட்டத்தக்கது. வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.