Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

பொத்துவில் கல்வி வலயத்தினை அமைப்பதற்கு பிரதமர் கோரிய ஆவணங்களை உதுமாலெப்பை எம்பி பிரதமரிடம் நேரில் கையளித்தார்

Posted on August 7, 2025 by Admin | 149 Views

(அபூ உமர்)

பொத்துவில் கல்வி வலயத்தினை அமைப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநரினால் மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியை நேற்று (06-08-2025) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பிரதமரிடம் கையளித்தார்.

பொத்துவில்,உகன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்களை அமைப்பதற்கான கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாய்மொழி கேள்வி ஒன்றை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கேட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களுடைய அக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய….

பொத்துவில், உகன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்கள் அமைப்பதற்கான கோரிக்கை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து இது வரை கல்வி அமைச்சுக்கு பரிந்துரை வழங்கப்படவில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களால் தெரிவிக்கப்படுகிற பொத்துவில்,உகன புதிய கல்வி வலயங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பதிலளித்தார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில்,

பொத்துவில்,உகன கல்வி வலயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்ற போது கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்களை நிறுவுவதற்காக கிழக்கு மாகாண ஆளுநரும் கல்வி அமைச்சின் செயலாளரும் ஏற்கனவே மத்திய கல்வி அமைச்சுக்கு பரிந்துரை வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, கடந்த அரசாங்கம் புதிய கல்வி வலயங்களை வழங்குவதாக கூறி அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் 143000 வாக்குகளை மக்கள் NPP கட்சிக்கு வழங்கி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

எனவே அம்பாறை மாவட்ட மக்களின் நியாயமான இக்கோரிக்கையினை பிரதமர் ஹரினி அமரசூரிய நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு மீண்டும் பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய,

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினதும், ஆளுநரின் சிபாரிசு கடிதமும் கிடைத்தவுடன் உகன, பொத்துவில் கல்வி வலயங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

05-08-2025ம் திகதி பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்த சபை குழுக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொத்துவில் பிரதேசத்திற்கான தனிக் கல்வி வலயத்தை உருவாக்க கிழக்கு மாகாண ஆளுநரினாலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரினாலும் மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பரிந்துரை தொடர்பான கடிதங்களின் பிரதிகள் தன்னிடம் உள்ளதாக பிரதம மந்திரியிடம் தெரிவித்தா்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய,

06-08-2025ம் திகதி நடைபெறவுள்ள கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் பொத்துவில் தனியான கல்வி வலயம் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளின் ஆவணங்களை வழங்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அதற்கமைவாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை நேற்று(06-08-2025) நடைபெற்ற கல்வி அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரால் மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட சிபாரிசு கடிதத்தின் பிரதிகளை பிரதமரிடம் கையளித்தார்.