(அபூ உமர்)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் தீகவாபி ஆகிய மூன்று முக்கியமான பிரதேசங்களில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்காக, அடுத்த ஆண்டுக்கான விளையாட்டுத் துறை நிதி திட்டத்தில் முன்னுரிமை வழங்குமாறு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
இக் கோரிக்கை, 2025 ஆகஸ்ட் 8ஆம் திகதி, பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்ற விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது.
உதுமாலெப்பை தனது உரையில்,
அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள மைதானமானது அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் காணப்படும் 400 மீற்றர் கொண்ட ஒரே ஒரு மைதானமாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த மைதானம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சி இடமாகவும், மாகாண, மாவட்ட, வலய மட்ட போட்டிகள் நடக்கும் இடமாகவும் இருந்து வருகிறது . எனவே, புற்றரைகள், பார்வையாளர்களுக்கான இருப்பிட வசதி உள்ளிட்ட பூர்த்தி செய்யப்படாத கட்டமைப்புகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார்.
அத்துடன், ஒலுவில் பிரதேச மக்களுக்கான விளையாட்டு மைதானத்திற்காக ஆறு ஏக்கர் நிலம் அட்டாளைச்சேனை பிரதேச சபையால் ஒதுக்கப்பட்டு அது தற்போது அடையாளம் காணப்பட்ட நிலையில், அடுத்த நிதியில் ஒதுக்கீடு வழங்கி அம்மைதானத்தின் அபிவிருத்திக்கு முதன்மை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தீகவாபி விளையாட்டு மைதானம், பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருப்பதையும், அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு திறன் வளர்ச்சிக்கு சிறந்த இடமாக அமைந்துள்ள அந்த மைதானத்தை விசேட கவனத்துடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனக் கூறினார்.
உதுமாலெப்பை எம்பியின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே,
அட்டாளைச்சேனை, ஒலுவில், தீகவாபி விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி பணிகள், அடுத்த ஆண்டுக்கான விளையாட்டுத் துறை நிதி திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த முடிவுகள், அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வசதிகளை உருவாக்கும் ஒரு புதிய கட்டமாக கருதப்படுகின்றன.