இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வினாத்தாளைப் பற்றி கேள்விகள் எழுப்புவதையும், தேவையற்ற அழுத்தம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கேட்டுக்கொண்டார்.
பரீட்சை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிமட்டுமே என்பதை வலியுறுத்திய அவர், “சிறுவர்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும். பரீட்சைக்குப் பின் மன அழுத்தம் தரும் உரையாடல்கள் அல்லது ஒப்பீடுகள் அவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும்” என தெரிவித்தார்.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை முடிந்த மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும், மாணவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப பரீட்சையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பெற்றோர்கள், பரீட்சையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளிடம் தேவையற்ற எதிர்பார்ப்புகள் வைக்காமல், அவர்களின் மனநலனையும் ஆனந்தத்தையும் பாதுகாப்பது எமது கடமையாகும்.