அக்கரைப்பற்றில் இயங்கிவரும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி எம்.ஐ.எம். ஹனிபா தலைமையில் நேற்று (14) வியாழக்கிழமை கல்வி நிறுவன வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.
புதிய கட்டிடத்திற்கான இடத்தை வழங்கிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த அல்-ஹாஜ் எஸ். எல். சித்தீக் அவர்களின் குடும்பத்தினர் பிரதம அதிதிகளாக பங்கேற்று நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
பைத்துல் ஹிக்மா நிறுவனம், இப்பிராந்திய மாணவர்கள் விஞ்ஞானத் துறையில் பல்கலைக்கழகக் கல்வி தொடர்வதற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகிறது. சமூகத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பெற்றோர்களின் தியாகமும், சமூகத்தின் ஒத்துழைப்பும் முக்கியமானவை என கலாநிதி ஹனிபா தனது உரையில் வலியுறுத்தினார். மாணவர்கள் பெற்றோரின் கனவை நனவாக்கும் விதமாக பொறுப்புணர்ச்சியுடன் கல்வி கற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
நிகழ்வில், பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அன்பளிப்பாளர் குடும்பத்தினர், கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதம அதிதிக்கு பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.