அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரில் கடந்த சில வாரங்களாக குடியிருப்பு வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த தெரு மின் விளக்குகள் செயலிழந்து காணப்பட்டன. இரவு நேரங்களில் இருட்டில் மூழ்கிய தெருக்கள், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வை மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பையும் ஆபத்துக்குள்ளாக்கியது.
அறுவடைக்காலம் என்பதனால், வயல்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் ஒளிராமையினால் வீடு திரும்பும் மக்கள் அச்சத்துடனும் எச்சரிக்கையுடனும் வாழ்ந்து வந்தனர். பலர் இரவில் வெளியே செல்லத் தயங்கிய நிலையில் சிரமங்களை எதிர்கொண்டனர்.
அப்பகுதி மக்களின் அச்சத்தையும் அவலங்களையும் நேரடியாக அவதானித்த கௌரவ பிரதேச சபை உறுப்பினர் எம். எல். றினாஸ் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்தார்.
நேற்று (15.08.2025) அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில், அப்பகுதியில் பழுதடைந்த மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் ஒளிரச் செய்யப்பட்டன. இதனால், இரவு நேரங்களில் அந்தப் பகுதி முழுவதும் ஒளிர்ந்து, மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் உருவானது.
மின்விளக்குகள் மீண்டும் ஒளிரத் தொடங்கியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர். இப்போது மக்கள் வேலை முடிந்து வீடு திரும்பவும் அச்சமின்றி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உடனடி நடவடிக்கை எடுத்த பிரதேச சபை உறுப்பினர் எம். எல். றினாஸுக்கு மக்கள் நன்றியும் தெரிவித்தனர்.