(அபூ உமர்)
பலஸ்தீன் மக்களுக்கு ஒற்றுமையும் ஆதரவும் தெரிவிக்கும் வகையில், கொழும்பு நகரில் நேற்று (ஆகஸ்ட் 15) பல்வேறு தரப்பினரும் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான இனப்படுகொலையை நிறுத்துமாறு வலியுறுத்திய பங்கேற்பாளர்கள், கைகளில் பலஸ்தீன் கொடிகள், பதாகைகள் ஏந்தி, “பாலஸ்தீன் விடுதலை”, “காசாவுக்கு நீதி வேண்டும்” என முழக்கமிட்டனர். காசாவில் பட்டினியால் வாடும் குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்து தவிக்கும் மக்களை சுட்டிக்காட்டும் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதிலும், அவர்கள் குரல்கள் ஆழ்ந்த துயரத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் பிரதிபலித்தன.
அரசியல் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். “இது வெறும் பலஸ்தீனின் பிரச்சினை அல்ல, மனித இனத்தின் பிரச்சினை. அங்கு நிகழ்வது இனப்படுகொலை” என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுத்து, போரினை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் இந்தப் போராட்டம், “பலஸ்தீன் மக்களின் சுதந்திரப் போராட்டம் தனிமையில் இல்லை; உலகெங்கும் கோடி கணக்கான மக்கள் அவர்களுடன் நிற்கிறார்கள்” என்பதைக் காட்டும் வலுவான செய்தியாக உலகிற்கு சென்றடைந்தது.