(அபூ உமர்)
அட்டாளைச்சேனை, பாலமுனை, திராய்க்கேணி, ஒலுவில், தீகவாபி போன்ற ஊர்களை உள்ளடக்கிய அட்டாளைச்சேனை பிரதேச சபை இதுவரை எந்தவொரு master plan இன்றியும் செயற்பட்டு வந்துள்ளது. இதன் விளைவாக இப்பிரதேசங்கள் வெள்ளப் பாதிப்பு, முறையற்ற அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற இடர்களை காலம் காலமாக எதிர்கொண்டு வருகின்றன.
இந் நிலையை கருத்தில் கொண்டு, கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்கள் 2025.06.15 ஆம் திகதி எழுத்துமூலம், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான master plan ஒன்றை தயார் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் 2025.06.16 ஆம் திகதி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான master plan தயாரிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் 2025.07.18 ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரிடமிருந்து master plan உருவாக்கத்திற்கு தேவையான சில தகவல்களை கோரியுள்ளது.
ஒரு பிரதேசத்திற்கு master plan ஏன் அவசியம்?
ஒரு master plan என்பது ஒரு பிரதேசத்தின் ஒழுங்கான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான முழுமையான வழிகாட்டி ஆகும்.
வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களை குறைக்க, நீர்வழிகள் மற்றும் வடிகால் அமைப்புகள் சரியாக திட்டமிடப்படும். குடியிருப்பு, கல்வி, சுகாதாரம், வீதி வசதிகள் போன்றவை மக்கள் தேவைக்கேற்ப சரியான இடங்களில் அமையப்பெறும் மற்றும் முறையற்ற அபிவிருத்தி தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சி ஏற்படும். தொழில்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து, வேலை வாய்ப்புகளும் உருவாகும் மேலும் மக்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு, எதிர்கால தலைமுறைகளுக்கான பாதுகாப்பான சமூக சூழல் உருவாகும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் அட்டாளைச்சேனை பிரதேசம் எதிர்காலத்தில் சீரான வளர்ச்சி, பாதுகாப்பான சூழல், மக்களின் நலனை முன்னிறுத்தும் திட்டமிட்ட முன்னேற்றம் எனும் புதிய கட்டத்தை அடையும்.