Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

காட்டு யானைகள் தொல்லையால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மதிற் சுவர் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு பலத்த சேதம்

Posted on August 17, 2025 by Admin | 233 Views

(எம்.ஜே.எம்.சஜீத், எம்.ஏ.றமீஸ்)

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மற்றும் அதனை அண்டிய பகுதியில் இன்று(17) அதிகாலை காட்டு யானைகள் சில உட்புகுந்து பல்வேறான சேதங்களை உண்டு பண்ணியுள்ளன.

அதிகாலை 4 மணியளவில் பாடசாலையினுள் உட்புகுந்த இக்காட்டு யானைகள் பாடசாலையின் சுற்று மதிலின் சில பகுதிகளையும், பயன்தரும் மரங்களையும் உடைத்து சேதமாக்கியுள்ளதுடன், பாடசாலையினை அண்டிய பகுகளில் இருந்த சில மக்கள் குடியிருப்பு உடைமைகளுக்கும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளன.

பாடசாலையின் சுற்று மதிற்சுவரினை நான்கு இடங்களில் உடைத்துக் கொண்டு பாடசாலையினுள் நுழைத்த இக்காட்டு யானைகள் பயன்தரும் மரங்கள் சிலவற்றுக்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு, சில உடைமைகளையும் நாசப்படுத்தியுள்ளதாக அதிபர் ஏ.எல்.நசீபா தெரிவித்தார்.

நெல் அறுவடை நிறைவடைந்தவுடன் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையினை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பதோடு, பாடசலையின் உடைமைகளுக்கும் காட்டு யானைகளால் பல தடவைகள் சேதங்கள் ஏற்பட்டுள்தாகவும் இதனால் தாம் தொடர்ச்சியான இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இதனை பல முறை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப் படுத்தியும் இதுவரை எவ்வித தீர்வும் கிட்டவில்லை எனவும் அதிபர் ஏ.எல்.நசீபா மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலையினை அண்டிய மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த இக்காட்டு யானைகள் வீடுகள், சுற்றுமதில்கள், கால்நடை பராமரிப்புக் கொட்டில்கள், கால்நடை உணவுப் பொருட்கள், பயன்தரும் மரங்கள் மற்றும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகள் போன்றவற்றுக்கும் பலத்த சேதத்தினை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டனர்.