தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த தொழில் தள பயிற்சியாளர் விருதில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேரில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அம்பாறை ஹார்டி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் என். இம்ரான் தேசிய அளவில் முதலிடத்தையும், வயம்ப பல்கலைக்கழக மாணவர் ஏ.ஜி.எம். அஸீம் 7வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
அதேபோல், அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தராக பணியாற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எச்.எம். மிஸ்பர் அவர்கள், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 386 தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களில் 118 பேர் போட்டியிட்ட நிலையில், முதலிடம் பிடித்து, சிறந்த தொழில் வழிகாட்டல் விருது பெற்றுள்ளார்.
இவர்களுக்கான கௌரவ நிகழ்வு 2025 ஆகஸ்ட் 13ஆம் திகதி, கொழும்பு Waters Edge ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விருதுகள், மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) மற்றும் கொரிய அரசின் KOICA நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Career 1 தேசிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை மண்ணின் இளம் திறமைகள் இவ்விருதுகளை பெற்றதன் மூலம், அந்த பகுதி பெருமை அடைந்துள்ளது.