(அபூ உமர்)
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே. நவாஸ், உதவிப் பணிப்பாளர்கள் எம்.எஸ். அலா அஹமட், என். நிலூபர் மற்றும் கணக்காளர் எஸ்.எல். நிப்ராஸ் ஆகியோர்களுடன் இன்று (18.08.2025) திணைக்கள அலுவலகத்தில் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டார்.
சந்திப்பின்போது, சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் சுங்கத்துறையில் 1½ ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, அறபுக் கல்லூரிகள் பதிவு செய்வதற்கான தடை காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைகள், அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள ஆலம்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் சாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கிடையிலான நீடித்த பிணக்குகள் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள ஆலம்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் சாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கிடையிலான நீடித்த பிணக்குகளை அம்பாறை மாவட்ட உலமா சபை சார்பில் முன்னெடுக்கப்பட்ட சமரச முயற்சிகள் ஐந்து மாதங்களாக நடைபெற்றும், இரு பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படாத நிலை தொடர்வதால், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விசேட கூட்டமொன்றை நடத்தி, இரு நிர்வாகங்களையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து தீர்வு காண வேண்டும் என எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
இதன் பேரில், பிரச்சினைக்கான தீர்வை நோக்கி விரைவில் விஷேட கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.