வடக்கு மற்றும் கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவப் பிரசன்னம் மற்றும் அடக்குமுறைகளை எதிர்த்து இன்று (திங்கள்) கடையடைப்பு திட்டமிட்டபடி நடைபெறும் ஆனால் அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறுகையில், “கொழும்பில் அரசாங்கப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இராணுவ மற்றும் பொலிஸ் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். அங்கு, வடக்கு-கிழக்கில் நடைபெறவுள்ள ஹர்த்தால் குறித்து அவர்கள் கருத்து வெளியிட்டனர்.
அமைச்சர் கூறுகையில், ‘இது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இப்படிப்பட்ட சம்பவம் எங்கு இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக கடையடைப்பிற்கு அவசியமில்லை’ எனக் குறிப்பிட்டார்.
ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் இவ்வாறான அதிகப்படியான இராணுவப் பிரசன்னம் எங்கும் இல்லை. வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமே சாதாரண மக்களின் வாழ்வில் இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இதை வெளிக்கொணர்வதற்காகவே இன்றைய(18) கடையடைப்பு நடத்தப்படுகின்றது. கடந்த 16 ஆண்டுகளாக இந்த நிலைமை குறித்து எங்கள் கட்சி எச்சரிக்கை விடுத்து வருகிறது” எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.