வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய 11 பேர், 10 ஓவர்கள் மட்டுப்படுத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 17.08.2025 நேற்று வீரமுனை பொது விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நாணய சுழற்சியில் வென்ற அவர்கள் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்து, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு, கல்முனை பெஸ்ட் இலவன் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 25 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
போட்டியில் ஆட்டநாயகன் விருதினை தனது திறமையினால் வான வேடிக்கை நடாத்திய எம்.ஐ.எம். இர்ஸாத் அவர்களும், சிறந்த பந்துவீச்சாளர் விருது என். நபாத் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற மார்க்ஸ்மேன் அணிக்கு 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற பெஸ்ட் இலவன் அணிக்கு 30 ஆயிரம் ரூபா பணப்பரிசும், மூன்றாம் இடத்தைப் பெற்ற Trible G அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும், நான்காம் இடத்தைப் பெற்ற யூனிட்டி அணிக்கு 5000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.
இச்சுற்றுப்போட்டிக்கு பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நிறுவாகத்தினர் முக்கியமான அனுசரனையினை வழங்கியிருந்தனர்.