அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா திட்டம் தொடங்கியதில் இருந்து அறுபது ஆண்டுகள் கடந்த நிலையில், சுமார் 3,500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அக்கரைப்பற்று பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் ஒரு முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த நிகழ்வை, தேசிய காங்கிரஸ் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை கௌரவ முதல்வரும் முன்னாள் அமைச்சருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். நிகழ்வின் ஏற்பாட்டை அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் ,அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலாளர்கள், நீர்ப்பாசன, நில அளவுத்துறை, வீதி அபிவிருத்தி, நகர அபிவிருத்தி அதிகாரிகள், பொலிசார், அக்கரைப்பற்று மாநகரசபை, ஆலையடிவேம்பு மற்றும் பிற பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
கல்லோயா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 1958, 2004 மற்றும் 2024 ஆண்டுகளில் கடும் வெள்ளப் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக நிலங்களும் சேதமடைந்து, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.
கலந்துரையாடலில், வெள்ள அபாயங்களை குறைக்கும் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடு, தில்லையாற்றை ஆழப்படுத்துதல், இருபுற அணைகள் அமைத்தல், ஒதுக்குக் காணிகள் அடையாளப்படுத்துதல்
போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும், உலக வங்கியிடமிருந்து நிலுவையில் உள்ள 30 மில்லியன் நிதி பயன்பாட்டின் மூலம் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.