(அபூ உமர்)
நாட்டிலுள்ள 18,000க்கும் மேற்பட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கி, கிராம மட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (20.08.2025) நடைபெற்ற சமூர்த்தி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 1994 முதல் 1997 வரை நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றியும் இதுவரை எந்தவித பதவி உயர்வுகளும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு உரிய பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாடு முழுவதும் காணப்படும் வெற்றிடங்களை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், கிராம உத்தியோகத்தர்களுக்கு MN–2 சம்பளக் குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்ட மறுசீரமைப்பைப் போன்று, சமூர்த்தி உத்தியோகத்தர்களின் சம்பளமும் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.
வடகிழக்கில் பணியாற்றும் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்காக திணைக்கள சுற்றறிக்கைகள் மற்றும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற அல்லது உயிரிழந்த உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திவினெகும அபிவிருத்தித் திணைக்களம் நிறுவப்பட்ட நிலையில், புதியதாக நியமிக்கப்பட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அடிப்படை சேவைக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உதுமாலெப்பை தெரிவித்தார்.
சமீபத்திய ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆதரவு வழங்கியிருந்தனர் என்பதையும் நினைவுபடுத்திய அவர், அவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.