அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு –பாலமுனை பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த தெரு மின்விளக்குகள் மீண்டும் செயலிழந்ததன் காரணமாக அந்தப் பகுதியில் இரவு நேரப் போக்குவரத்து பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தப் பிரதான வீதியில் பயணிகள் நீண்டகாலமாக ஒளி வசதியின்றி சிரமங்களைச் சந்தித்திருந்த நிலையில், அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் சமீபத்தில் மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் ஒளிரவிடப்பட்டன.
ஆனால், சில நாட்களுக்குள் மீண்டும் மின்விளக்குகள் செயலிழந்துள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளுக்கு என்ன நடத்தது?
பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளின் மின் வயர்களுக்குள் செம்புக் கம்பிகள் உள்ளன. அந்த செம்புக் கம்பிகளை குறிவைத்து திருடர்கள் இரவு நேரத்தில் துண்டித்து எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக பொலிஸிடம் முறையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் இந்தப் பிரதான வீதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
அப்பகுதியினால் பிரயாணம் மேற்கொள்ளும் பிரயாணிகள், விரைவில் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றனர். அதோடு, இரவு நேரங்களில் காவல்துறை ரோந்துப் பணிகளை அதிகரித்து திருடர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது..