உரிய முறையில் விடுமுறை பெறாமல் பணிக்கு சமூகமளிக்காத தபால் ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தகவலை அஞ்சல் மாஅதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தபால் தொழிற்சங்கங்களின் தொடர்ந்து ஆறு நாட்களாக முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், அஞ்சல் உத்தியோகத்தர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டம் தொடங்கியுள்ளதால் பதுளை, காலி, அநுராதபுரம், குருணாகல் உள்ளிட்ட பிரதான அஞ்சல் அலுவலகங்களின் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பொது மக்கள் அசௌகரியத்தில் சிக்கியுள்ளதாக பிரதி அஞ்சல் மாஅதிபர் சமிஷா டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், பணிக்கு சமூகமளிக்காதோர் உடனடியாக திரும்ப வேண்டும் என்றும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அத்துடன், கடந்த சில நாட்களாக ஏற்பட்ட இப்போராட்டத்தால் சுமார் 100 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்