பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கான சட்டமூலம் எதிர்வரும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரர் முன்வைத்த ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்தினால் அல்லாது, எமது அரசின் கொள்கை பிரகடனத்திற்கிணங்கவே PTA நீக்கப்படும். அதற்காக சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை இந்த மாதம் இறுதிக்குள் முடிவடைந்து, செப்டம்பர் ஆரம்பத்தில் சட்டமூலமாக வர்த்தமானியில் வெளிவரும்,” என அவர் கூறினார்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டம் இன, மத அடிப்படையில் ஒருவரையும் கைது செய்வதற்குப் பயன்படுத்தப்படவில்லை; மாறாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் விதமாக பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை, எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்