முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக அந்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதோடு, இரத்தத்தில் சில மாற்றங்கள் மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் நீண்ட நேரம் காத்திருந்தபோது மின்சாரம் தடைப்பட்டதாலும், தண்ணீர் அருந்தாததாலும் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு தோன்றியதாக டாக்டர் பெல்லன விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, அவர் சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
“முன்னாள் ஜனாதிபதியை இப்போது பார்த்தேன். அவருக்கு ஓரளவு நீர்ச்சத்து குறைபாடு, இரத்தத்தில் மாற்றங்கள் மற்றும் பிற அறிகுறிகள் உள்ளன. இதனால், மூன்று நாட்கள் கடுமையான ஓய்வு அவசியம். சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே நிபுணர்கள் குழுவின் கீழ் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு முதல் மூன்று நாட்களில் அவர் நலம்பெறுவார் என்று நம்புகிறோம்” எனவும் டாக்டர் பெல்லன தெரிவித்துள்ளார்.