இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டது.
கடந்த 18ஆம் திகதி அம்பாறை மருதமுனை பகுதியில் உள்ள அவரது இல்ல அலுவலகத்தில் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினரால் நீதிபதியும் மனைவியும் கைது செய்யப்பட்டனர். அப்போது, நீதிபதி ரூ.2,000வும் மனைவி ரூ.300வும் இலஞ்சமாக பெற்றிருந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.
இவ்விருவரும் கடந்த 19ஆம் திகதி கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியல் மேலும் நீட்டிக்கப்பட்டது.
குறித்த நீதிபதி, 2023 மார்ச் 1ஆம் திகதியிலிருந்து காதி நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்த சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை சமாதான நீதிபதியுமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காதி நீதிமன்றங்கள், இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் திருமணம், விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களாகும்.