சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கூறியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று (27.08.2025) உரையாற்றிய அவர்,
“ஒவ்வொரு வருடமும் சம்புக்களப்பில் உருவாகும் சல்வீனியாவை நீர்ப்பாசனத் திணைக்களம் துப்பரவு செய்வது வழக்கம். ஆனால் அதனை வைத்தே ‘வடிச்சல் திட்டம் நிறைவு பெற்றுவிட்டது’ என்று பேசுவது கவலையளிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
சம்புக்களப்பு வடிச்சல், அட்டாளைச்சேனை கோணாவத்தை வடிச்சல் நீண்டகாலமாக நீர் வடியாமல் தடைப்பட்டிருந்தன. இவ்வடிச்சல் திட்டத்திற்காக முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கிழக்கு மாகாண சபை அமைச்சராக பதவி வகித்த நானும் இத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக இரண்டு லெஜர் சம்புக்களப்பு வடிச்சல் தோண்டுவதற்கு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு வழங்கி வடிச்சல் திட்டத்தினை ஆரம்பித்ததுடன் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றில் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த தடைகளை நீக்கியது மாத்திரமல்லாது 5000 தென்னை மரங்களை தறித்து அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை அகலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினோம். இதனால் இன்று அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் வெள்ள காலத்தில் நீர் வழிந்தோடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
உலக வங்கி, சம்புக்களப்பு (தில்லையாறு) அகலப்படுத்தும் திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கியிருந்தது. ஆனால் இதுவரையும் அந்த நிதி பயன்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
“இது குறித்து நான் பலமுறை கோரிக்கை வைத்தும் செயல் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறிருக்க, 76 ஆண்டுகளாக யாரும் எதுவும் செய்யவில்லை என கூறுவது தவறானது. வரலாற்றை மறைத்து பேசுவதை நிறுத்த வேண்டும்,” என உதுமாலெப்பை எம்.பி வலியுறுத்தினார்.
“அபிவிருத்திப் பணிகளை யார் செய்தாலும் நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மக்களுக்காக பணிபுரிய வேண்டும்.
ஆதம்பாவா எம்.பி அவர்கள், எங்களை விட அதிகமான அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்தால் நாங்களும் அவரை வாழ்த்துவோம்,” என அவர் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் குரல்களாலேயே சில நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன,” எனவும் உதுமாலெப்பை எம்.பி கூறினார்