சீனாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. வெறும் 17 வயதுடைய ஜோ என்ற இளம்பெண், தனது 19 வயது காதலன் ஹுவாங்கை மியான்மரில் செயல்படும் மோசடி கும்பலுக்கு விற்றுவிட்டார்.
போலியான வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற பெயரில் ஹுவாங்கை தாய்லாந்து அழைத்துச் சென்ற ஜோ, பின்னர் அவரை கும்பலிடம் ரூ.11 லட்சத்திற்கு ஒப்படைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பல் ஹுவாங்கை சுதந்திரம் இன்றி அடைத்து வைத்து, தினமும் 20 மணி நேரம் ஆன்லைன் மோசடிகள், போலியான முதலீட்டு வலைத்தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் சட்டவிரோத பணிகளில் ஈடுபடச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதாபிமானமற்ற சூழலில் கடுமையாக அவதிப்பட்ட ஹுவாங்கின் குடும்பம், அவரை மீட்க கும்பலுக்கு ரூ.41 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் பிறகே அவர் உயிருடன் வெளியேற முடிந்தது.
இதற்கிடையில், காதலனை விற்று பெற்ற பணத்தை ஜோ சொகுசு வாழ்க்கைக்காக வீணடித்தது வெளிச்சமிட்டுள்ளது. விலையுயர்ந்த பொருட்கள், ஆடம்பர வாகனங்கள், மற்றும் பார்ட்டிகளில் அந்தத் தொகையைச் செலவு செய்ததாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.