எதிர் வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் அரிய வகை முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.
“இரத்த நிலவு” என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரகணம், இந்த ஆண்டின் கடைசி முழு கிரகணம் என்பதோடு, சிறப்பாக 82 நிமிடங்கள் நீடிக்கும். இதனால் நிலவு அடர் சிவப்பு நிறத்தில் பிரகாசமாகக் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.உலக மக்கள் தொகையில் சுமார் 77 சதவீதம் பேருக்கு இந்த அற்புத நிகழ்வை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பாக ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இருந்து தெளிவாகக் காணக்கூடியது.இலங்கையர்களுக்கு இந்த முறை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக சந்திர கிரகணத்தை பார்வையிடும் அரிய வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சந்திர கிரகணம் எப்படி உருவாகிறது?
பூமி சூரியனைச் சுற்றியும், சந்திரன் பூமியைச் சுற்றியும் பயணிக்கும் போது, சில சமயங்களில் சூரியன்–பூமி–சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரக்கூடும். அப்போது பூமி சூரிய ஒளியை மறைத்து, அதன் நிழல் சந்திரனை மூடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இலங்கையில் காணக்கூடிய நேரங்கள் (இலங்கை நேரப்படி)
கிரகணம் ஆரம்பம் – இரவு 8.58 (செப்டம்பர் 7)
பகுதி கிரகணம் ஆரம்பம் – இரவு 9.57
முழு கிரகணம் – இரவு 11.01
அதிகபட்ச கிரகணம் – நள்ளிரவு 11.42
கங்கண கிரகணம் முடிவு – அதிகாலை 12.22 (செப்டம்பர் 8)
பகுதி கிரகணம் முடிவு – அதிகாலை 1.26
கிரகணம் நிறைவு – அதிகாலை 2.25