“சட்டத்தைப் பேணுவோம் சமாதானத்தைப் போற்றுவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 159ஆவது பொலிஸ் தின வைபவம் இன்று (3) பிற்பகல் திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்று உரையாற்றினார்.
தனது உரையில், “எந்தக் குற்றமும் காலப்போக்கில் மறைந்து போகாது; குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம் இடையூறாகாது. தங்கள் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றும் பொலிஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கும்” என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், சமூகத்தில் நாளுக்கு நாள் பெரும் சவாலாக உருவாகிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் மூலம் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க பொலிஸ் திணைக்களம் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பொதுமக்களின் நம்பிக்கை, மரியாதை மற்றும் நெருக்கத்தைப் பெற்று இயங்கும் நவீன பொலிஸ் திணைக்களத்தை உருவாக்குவதில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்