எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையிலிருந்து சுற்றுலாவிற்கு சென்ற குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்தில் சாரதி, நடத்துனர் உள்பட 34 பயணிகள் இருந்தனர். விபத்து நேற்று (04) இரவு சுமார் 9 மணியளவில் 23வது மற்றும் 24வது கிலோமீட்டர் தூண்களுக்கு இடையில் இடம்பெற்றது.
பொலிஸார் கூறியதாவது, பேருந்து முன்புறத்தில் வந்த சொகுசு காரில் மோதிய பின்பு, வீதியின் பாதுகாப்பு இரும்பு வேலியை இடித்து, சுமார் 1000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.
விபத்துக்குப் பிறகு அப்பகுதி மக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு அனுப்பினர். தற்போது பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியதலாவ வைத்தியசாலைகளில் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் அடங்குவர்.
இறந்தவர்களில் 6 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் தங்காலை மற்றும் அதைச் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்காலை நகரசபை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரே என்றும் பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க உறுதிப்படுத்தினார். சடலங்கள் தியதலாவ, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் அதிவேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், விபத்தில் உயிர் தப்பிய ஒருவர், விபத்துக்கு முன்னர் சாரதி பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதாக கூறியிருந்ததாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.