இன்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை மெலே கொலனி கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசல் மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா சிறப்பாக நடைபெற்றது.
இஸ்லாமிய மதத் தலைவர் நபி முஹம்மது அவர்களின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து சமயங்களையும் சேர்ந்த மக்களின் பங்கேற்பும் ஆதரவும் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
விழாவில், 2025 தேசிய மீலாதுன் நபி விழாவை ஒட்டி வெளியிடப்பட்ட நினைவு முத்திரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்து தொகுக்கப்பட்ட நூலும் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.
இன-மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஹம்பாந்தோட்டை மாவட்டப் பாடசாலைகளில் நடத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி தானே பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
2025 தேசிய மீலாதுன் நபி விழாவில் பங்கேற்றதற்காக ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம் மக்களும் முஸ்லிம் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபையும் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கின.
விழாவில் உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, இலங்கைக்கான ஹஜ் யாத்திரை ஒதுக்கீட்டை அதிகரிக்கும் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், யாத்ரீகர்களின் செலவை குறைத்து பங்கேற்பு எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் சார்பில் இரங்கல் தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், நபி முஹம்மது அவர்களின் போதனைகள் அமைதி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் ஒற்றுமையுடன் வாழும் அழகான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள் என அவர் சுட்டிக்காட்டினார். 2025 தேசிய மீலாதுன் நபி விழாவை வெற்றிகரமாக நடத்துவதில் பிரதேச மக்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகித்ததாகவும், அந்த ஒற்றுமை எதிர்கால நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.