Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

கட்சியின் கட்டமைப்பை மீறி செயற்படும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவிற்கு எதிராக உதுமாலெப்பை எம்பி பொலிசில் முறைப்பாடு

Posted on September 7, 2025 by Admin | 160 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினர் இன்று (07) மாலை சட்டவிரோதமாக கலந்தாலோசனை கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதனை தடுத்து நிறுத்துமாறு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை முறைப்பாடு செய்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அட்டாளைச்சேனை அமைப்பாளராகவும் உள்ள உதுமாலெப்பை எம்.பி, தனது அனுமதி பெறாமல் மத்திய குழுவினர் கூட்டம் நடத்துவது கட்சியின் சட்டத்துக்கு முரணானது என்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நிந்தவூரில் மாலையிலும் ,அட்டாளைச்சேனையில் சுபஹ் தொழுகையின் பின்னரும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கட்சித் தலைவர் மற்றும் செயலாளரின் ஆலோசனைக்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்க நேற்று(06) கூட்டம் ஒன்றினை உதுமாலெப்பை எம்பி ஏற்பாடு செய்து அதற்கான அழைப்பிதழை மத்திய குழுவிற்கும் அனுப்பியிருந்த போதும் இரவு 10:30 மணி வரை இக்கூட்டத்தில் மத்திய குழுவின் தலைவர், செயலாளர் கலந்துகொள்ளவில்லை .

ஆனால், அந்த அழைப்பிற்கு பதிலளிக்காமல் மத்திய குழுவினர் தனிப்பட்ட முறையில் இன்று மாலை 4.30க்கு அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு மண்டபத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அழைப்பிதழ் பலருக்கும், உதுமாலெப்பைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அமைப்பாளராகிய தனது அனுமதியின்றியும் கட்சியின் கட்டமைப்பை மீறியும் கூட்டம் நடத்தப்படுவதாக உதுமாலெப்பை எம்.பி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, மத்திய குழுத் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் மற்றும் செயலாளர் ஏ.சி.எம். ஹாரித்திடம் பொலிசார் வாக்குமூலம் பெற அழைப்பு விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

கட்சியின் அமைப்பாளர் பதவி மத்திய குழுவின் தலைவர் சிபார்சு செய்த ஒருவருக்கு வழங்கப்படாமல் உதுமாலெப்பை எம்.பிக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உதுமாலெப்பை எம்பி அனுப்பும் கடிதங்களில் “அமைப்பாளர்” எனும் பதவி இடம்பெற்றிருந்தால் கூட்டங்களில் பங்கேற்கமாட்டோம் என மத்திய குழுவின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்திருந்ததாகவும் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

மேலும், இன்று நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்ட இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக அக்கரைப்பற்று பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைப்பாளர் பதவியானது உதுமாலெப்பைக்கு வழங்கியதுதான் இவர்களது பிரச்சினைக்கு காரணமா?

அவ்வாறென்றால் அவ் அமைப்பாளர் பதவியை பெறுவதற்கு உதுமாலெப்பையை விட தகுதியானவர் யார்? என்பதனை மத்திய குழுவின் தலைவர் வெளிப்படையாக கூறினால் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் அல்லவா!