இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டம், தௌராலா பகுதியில் உள்ள பல கிராமங்களில் மர்மமான “நிர்வாண கும்பல்” அட்டூழியத்தால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
விவசாய நிலங்களில் இருந்து திடீரென நிர்வாணமாக வெளிப்படும் சிலர், தனியாகச் செல்லும் பெண்களை வயலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ய முயற்சிப்பதாக கிராமவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் நான்கு முறை இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
சமீபத்தில், பாராலா கிராமம் அருகே வேலைக்குச் சென்றிருந்த பெண் ஒருவரை இருவர் சூழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தப் பெண் சத்தம் போட்டதையடுத்து குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
“இவ்வகைச் சம்பவங்கள் வெட்கத்தால் வெளியில் சொல்லப்படாமல் போனது. ஆனால், பெண்கள் இப்போது வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறார்கள்,” என்று உள்ளூர் கிராமவாசிகளும், கிராமத் தலைவரும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மக்களின் அச்சத்தை நீக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு, டிரோன்கள் மூலமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.