Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் முஹம்மட் ஆதிக் நான்கு தங்கங்கள் வென்று சாதனை

Posted on September 8, 2025 by Admin | 222 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் ஐந்து நாட்கள் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில், அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் மாணவன் ஆர். முஹம்மட் ஆதிக் சிறப்பான சாதனையை நிகழ்த்தினார்.

அக்கறைப்பற்று கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 12 வயதுக்குட்பட்ட வீரர் ஆதிக், நீளப்பாய்தல் போட்டியில் 4.72 மீட்டர் தூரம் பாய்ந்து முதலிடம் பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 100 மீட்டர் மற்றும் 60 மீட்டர் ஓட்டப் போட்டிகளிலும் அவர் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். மூன்று தனிப்பட்ட போட்டிகளில் தங்கம் வென்றதோடு, கிழக்கு மாகாண சிறந்த மெய்வல்லுநர் வீரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும், 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4×50 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியிலும் அந்-நூர் மகா வித்தியாலயம் தங்கம் வென்றது. இதில் ஆதிக் தனது திறமையால் அணிக்குத் துணைபுரிந்தார்.

இதன் மூலம் முஹம்மட் ஆதிக் மொத்தம் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று தனது பாடசாலைக்கும் அக்கறைப்பற்று வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் சாதனையை பாடசாலை சமூகம் பாராட்டி வரவேற்றது. பாடசாலையின் அதிபர் ஏ. எம். அஸ்மி, உடற்கல்வி ஆசிரியர் ஆர். ஹாறூன் மற்றும் பயிற்றுவிப்பாளர் றிஸ்வானின் பங்களிப்பும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டது.

இந்த போட்டிகளில் அந்-நூர் மகா வித்தியாலயம் மொத்தம் ஏழு தங்கமும் ஒரு வெள்ளியும் பெற்று எட்டு பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளது. பதக்க எண்ணிக்கையின் அடிப்படையில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தில் முதலிடம் பெற்றதோடு, இன்று (8) மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் வீரர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.