முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தது. இதில் 151 ஆதரவு வாக்குகளும், ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கும் பதிவானது. இதன்படி, சட்டமூலம் 150 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆவார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென் இலங்கையின் மெதமுலனவில் உள்ள தனது இல்லத்திற்கு செல்லத் தயாராகி வருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
“முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பது பிரச்சினையல்ல. ஆனால், அவர்களுக்கு போதுமான மற்றும் நியாயமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் சலுகைகளை குறைப்பதில் புலம்பெயர் தமிழ் புலிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் செயல் போல தெரிகிறது,” என்றார்.
இந்தக் கருத்துக்கள், முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் தொடர்பான சட்டமூல விவாதத்தின் போது வெளியிடப்பட்டன.