(அபூ உமர்)
அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் கடற்கரைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள், மண்ணெண்ணெயை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க செல்லும் ஒவ்வொரு நாளும், எரிபொருள் தேடிச் சுற்றித் திரிவதே அவர்களின் முதல் வேலையாக மாறியுள்ளது.
மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், பல ஆண்டுகளுக்கு முன் இபாட் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான நிதியில் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் கடற்கரைப் பகுதிகளில் மண்ணெண்ணெய் நிரப்புநிலையங்கள் கட்டப்பட்டன. ஆனால் இன்று அவை சிதிலமடைந்து பயன்பாடின்றி கிடக்கின்றன. “நிலையம் இருக்கிறது, ஆனால் ஒரு துளி மண்ணெண்ணெய் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை,” என உள்ளூர் மீனவர்கள் மனமுடைந்து கூறுகின்றனர்.
இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, “நிலையங்களை உடனடியாக புனரமைத்து இயக்க வேண்டும். முடியாவிட்டால், குறைந்தது பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொறுப்பு கொடுத்து இயக்க வேண்டும். இல்லையெனில் மீனவர்கள் இன்னும் பெரும் துன்பத்தில் சிக்கிக்கொள்வார்கள்” எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த மீன்பிடி பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் நிலையங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒப்படைக்கும் வழிமுறையும் பரிசீலனையில் உள்ளதாகவும் உறுதியளித்தார்