காசா பகுதியின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. இந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,100 ஐக் கடந்துள்ளது என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று, காசாவில் அமைந்துள்ள மருத்துவமனைகள் அருகே இஸ்ரேல் வான்படை தாக்குதலை மேற்கொண்டது. குறிப்பாக அல்-ஷிஃபா மற்றும் அல்-அஹ்லி மருத்துவமனைகள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த தாக்குதல்களின் தொடர்ச்சியாக, கடந்த 24 மணித்தியாலங்களிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய எதிர்தாக்குதலில், இஸ்ரேல் இராணுவத்தின் மேஜர் ஓம்ரி சாய் பென் மோஷே, லெப்டினன்ட் எரான் ஷெலெம், லெப்டினன்ட் ஈதன் அவனர் பென் இட்ஷாக், மற்றும் லெப்டினன்ட் ரான் அரிலி உள்ளிட்ட நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசா மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைவதால், அங்குள்ள பொதுமக்களின் உயிரிழப்புகள் உலகளவில் ஆழ்ந்த கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.