(கல்முனை செய்தியாளர்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி நேற்று (18) சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் அழைப்பின் பேரில் இந்த திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். ரிபாஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, வைத்தியர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மூன்று மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத் தொகுதியானது க்ளினிக் பிரிவு, கட்டண அடிப்படையிலான விடுதிகள் மற்றும் கூட்ட மண்டபம் ஆகியவற்றைக் கொண்டதாகும். சுகாதார அமைச்சின் சுமார் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.