(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் மக்கள் நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த அப்துல்லாஹ் க்ராண்ட் பலஸ் அட்டாளைச்சேனையில் நேற்று(20) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
சவூதி அரேபியாவில் செயல்படும் சிலோன் ரெஸ்டாரண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பொறுப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐ.எல்.எம். பைசல் (றம்சான்) அவர்களின் சொந்த முயற்சியால் கட்டப்பட்ட இம்மண்டபம் அனைத்து நவீன வசதிகளுடனும் சமூக, கலாசார, சமய நிகழ்வுகளுக்குப் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பைசல் அவர்களின் தாயார் நாடாவை வெட்டி மண்டபத்தை திறந்து வைத்ததுடன் அதிதிகள் ஊர்வலமாக பொல்லடி முழக்கத்துடனும் மாலை அணிவித்தும் வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை, அஸ்ரப் தாஹிர், எம்.எஸ். அப்துல் வாசித், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உட்பட அரச அதிகாரிகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
முகாமைத்துவப் பணிப்பாளரின் மூத்த புதல்வி ஆங்கிலத்தில் சிறப்பான வரவேற்புரையாற்றியதுடன் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மண்டபத்தை உருவாக்கிய பைசல் அவர்களின் பணியைப் பலர் பாராட்டினர்.
சிறப்பு அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் விழா நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் இரவுச்சாப்பாடு வழங்கப்பட்டது.