டுபாயில் நடைபெற்ற 17வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. அணியின் சார்பில் சஹிப்சாதா ஃபர்ஹான் 57 ஓட்டங்களும், ஃபகர்ஸமான் 46 ஓட்டங்களும் பெற்று நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சிறந்து விளங்கினார்.
வெற்றி இலக்காக 147 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எளிதில் எட்டியது. திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களும், சிவம் துபே 33 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஃபஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியுடன், இந்திய அணி மொத்தம் 9வது முறையாக ஆசிய கிண்ண கிரிக்கெட் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.