அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் நெருக்கடிகளுக்கு அரசு இதுவரை தீர்வு வழங்காததை எதிர்த்து, நாளை (30) நாடு முழுவதும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
இன்றைய (29) செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், சம்மேளனச் செயலாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க, “அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. ஆனால் பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்வி நெருக்கடிகளுக்கான எந்தத் தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை” என்று கூறினார்.
அவர் மேலும், தற்போது அரசு கல்வித்துறையே கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும், பேராசிரியர் பற்றாக்குறை தீவிரமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கடந்த ஆண்டிலேயே பேராதனை பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் பணியைவிட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக கல்வியின் தரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.