ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் தாய் மற்றும் தந்தையை வரும் அக்டோபர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (01) அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, குழந்தையை கைவிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த 17 வயது தாய் மற்றும் ஒலுவிலில் வசிக்கும் 17 வயது தந்தை ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) திருமணமாகாத உறவின் மூலம் இந்தப் பெண் குழந்தை பிறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தையின் உறவினர்கள் இந்த உறவை எதிர்த்ததால், தாய் தனது வீட்டிலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
பின்னர் குழந்தையின் தந்தை, காதலியின் வீட்டுக்குச் சென்று “இந்தக் குழந்தையை நான் வளர்க்கிறேன்” எனக் கூறி, குழந்தையைப் பெற்றுக்கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து தந்தை, தனது உறவினரான பெண் ஒருவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, “ஒலுவில் பகுதியில் ஒரு கைவிடப்பட்ட பெண் குழந்தையை கண்டெடுத்தேன், உங்களிடம் பெண் குழந்தை இல்லை, நீங்கள் இதனை வளர்க்க முடியுமா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் குழந்தையின் தொப்புள்கொடி முறையாக வெட்டப்படாததால் இரத்தக் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தக் குழந்தை உடனடியாக ஒலுவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்குப் பின், “ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்ட குழந்தை கண்டெடுக்கப்பட்டது” என்ற தகவல் பரவியதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதன் பின்னணியில், சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.