நாம் அனைவரும் அன்றாடம் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்லும் போது இலவசமாகக் கிடைக்கும் சொப்பிங் பைகள் இனி வரலாறாகிவிடுகிறது. வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் அந்த பைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு நுகர்வோரிடம் பணம் அறவிடப்படும்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானியின் படி, கடைகளில் வழங்கப்படும் ஒவ்வொரு பைக்கும் தனி விலை நிர்ணயிக்கப்பட்டு, அது நுகர்வோருக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மேலும், கடைகளில் அந்த விலைப்பட்டியல் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்படவும் வேண்டும்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை உண்டாக்குகின்றன. இயற்கையில் சிதைவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் இந்த பைகள், மண், நீர், காற்று அனைத்தையும் பாதிக்கின்றன. குப்பை மேடுகளாக குவிந்து கிடக்கும் பைகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையைத் தடுக்கவே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவின் போது அரசாங்கம் இந்த நடைமுறையை விரைவில் அமுல்படுத்துவதாக நீதிமன்றத்தில் அறிவித்தது.