(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மூன்றாவது அமர்வு கடந்த 2025.09.17ம் திகதி தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அவ் அமர்வின் போது தவிசாளர் உரையாற்றுகையில்…
சில உறுப்பினர்கள் சபை அமர்வுகள் நடைபெறும் தருணத்திலேயே திடீரென நினைத்ததையெல்லாம் பிரேரணைகளாக முன்வைக்க முயலுவதனால் இது சபையின் ஒழுங்கையும் பணியின் முன்னேற்றத்தையும் பாதிப்பதோடு விவாதங்கள் குழப்பமடையவும் சபை நேரம் வீணாகுவதற்கும்
வழிவகுக்கிறது. இதுபோன்ற முறையற்ற நடைமுறைகள் காரணமாக சபையின் ஒழுங்கும், பொது நலனுக்கான பணிகளின் சீரான நடைமுறைக்கு தடைகள் ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படாத எந்த பிரேரணையும் இனி சபை அமர்வுகளில் முன்வைக்கப்படக்கூடாது எனவும் சபை அமர்வில் நினைத்ததையெல்லாம் பிரேரணைகளாக பேசமுடியாது என்ற உத்தரவை தவிசாளர் வழங்கியதுடன் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.
உறுப்பினர்கள் வழங்கும் பிரேரணைகளில் அரச இலச்சினை மற்றும் பிரதேச சபையின் இலச்சினை பொறிக்கப்படக்கூடாது என்றும் சபையின் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சட்ட விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.