Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி

Posted on October 6, 2025 by Admin | 148 Views

(ஆலங்குளம் செய்தியாளர்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் குறித்து உரிய பிரேரணைகளை முன்வைக்காமல் சில உறுப்பினர்கள் செயலற்ற நிலையில் இருப்பது குறித்து சமூகத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

தவிசாளரைத் தவிர்த்து மொத்தம் 17 கௌரவ உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் கடந்த 2025 செப்டம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற மூன்றாவது சபை அமர்வில் எஸ்.ஐ.எம். ரியாஸ் மற்றும் ஏ.எல். பாயிஸ் ஆகிய இரு கெளரவ உறுப்பினர்கள் மாத்திரமே பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளனர். இதேவேளை, மீதமுள்ள 15 உறுப்பினர்களும் எதுவிதமான பிரேரணைகளையும் முன்வைக்காதது பொதுமக்களிடத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அட்டாளைச்சேனை, முல்லைத்தீவு, சம்புநகர், ஆலங்குளம், திராய்க்கேணி,பாலமுனை,தீகவாபி, அஸ்ரப் நகர், ஒலுவில் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்களின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பிரதேச மக்களின் பிரச்சினைகளை சபையில் பிரேரணைகள் ஊடாக உரிய முறையில் முன்வைக்காதது மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

சில உறுப்பினர்கள் தொழில்நுட்ப உதவியின்மை, வழிகாட்டல் பற்றாக்குறை அல்லது அனுபவக் குறைபாடு காரணமாக தங்கள் பிரதேச பிரச்சினைகளை பிரேரணைகளாக உருவாக்க முடியாமல் தவறவிட்டிருக்கலாம். இது பிரதேச சபையின் உண்மையான நோக்கத்தையே வீணாக்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .

சில கௌரவ உறுப்பினர்கள் சபையில் பிரேரணைகள் முன்வைக்காமல் சிரமதான பணிகள், வீதிகள் செப்பனிடல், மின் விளக்குகள் திருத்துதல் போன்ற பணிகளை செய்து அதை முகநூல் வழியாகப் பகிர்வதை மக்கள் கவனித்துள்ளனர்.
“அந்தப் பணிகளை சபை வாயிலாக பிரேரணையாக முன்வைத்து சட்டபூர்வமாக நிறைவேற்றுவது ஏன் தவிர்க்கப்படுகிறது?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜனநாயகத்தின் அடிப்படையிலான பிரதேச சபையின் முக்கிய பணி மக்களின் குரலை , தேவைகளை சபைக்கு கொண்டு செல்வதாகும். ஆனால் அச்செயலில் பெரும்பாலான உறுப்பினர்கள் பின்தங்கியிருப்பது அந்த நோக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்கள் தங்களுக்காக பேசும், செயல்படும், பிரேரணைகள் முன்வைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் உறுப்பினர்களையே விரும்புகின்றனர். வெறும் ஆசனங்களை சூடாக்கும் உறுப்பினர்களை அவர்கள் இனி ஏற்கப் போவதில்லை என்பதே மக்கள் மத்தியில் தெளிவாக ஒலிக்கும் கருத்தாகும்.