கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் செயல்படும் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தங்களது பாதுகாப்பிற்காக கட்டாயமாக தலைகவசம் (Helmet) அணிந்து செல்ல வேண்டும் என கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பும், வீதிப் போக்குவரத்து சட்டங்களின் பின்பற்றலும் உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தலைகவசம் அணியாமை அல்லது போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், தொடர்புடைய மாணவர்கள்மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை ஆரம்பம் மற்றும் முடிவு நேரங்களில் வீதிப் போக்குவரத்து ஒழுங்கை பேணும் வகையில், போக்குவரத்து காப்பாளர்கள் நியமனம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
