(சம்மாந்துறை செய்தியாளர்)
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறப்பாக கல்வி கற்றுத் தகுதியை நிரூபித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மஜீத் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் மஹேந்திரகுமார், சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவர் ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
சம்மாந்துறை, இறக்காமம், வரிப்பதான்சேனை உள்ளிட்ட பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் சிறந்த கல்வி சாதனையாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

